//"என் அனுபவத்தில் சிலவற்றை இங்கு மனம் விட்டுப் பகிர்ந்து கொள்கிறேன். தமிழின் சிக்கல் இலக்கியத் தமிழ் மற்றும் பேச்சுத் தமிழ் என இரு நடை இருப்பதுதான். தமிழைக் கற்பிக்கும்போது பேச்சுத்தமிழ் இலக்கியத்தமிழ் என இருவேறு மொழியைக் கற்பிக்கவேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் இது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஆனால் வெளிநாடுகளில் தமிழ் கற்போருக்கு இது ஒரு பெரிய பிரச்சனை. சிங்கப்பூரில் இலக்கியத்தமிழை விட்டுப் பேச்சுத்தமிழை மட்டுமே பாடத்தில் கொடுக்க முயற்சிகள் செய்து வருகிறார்கள்! இதையே அமெரிக்காவிலும் பல தமிழ் ஆசிரியர்கள் செய்ய விரும்புகிறார்கள். இந்தி, ஆங்கிலம் போன்று பேசுவதை எழுதவும் எழுதுவதை பேசுவதுமாக நாம் தமிழ் கற்பிக்க முடியாது. எழுத ஒன்று பேச ஒன்று எனும் நிலை உள்ளது. இதுதான் நீங்கள் சொல்லும் தியாகத்துக்கான இடம். இந்த வேறுபாட்டை ஒழிக்க யாரேனும் முயல்வார்களா? அதுவே மொழிச் சீர்திருத்தம் எனக் கருதுவேன் நான். பெங்காளியில் இவ்வகை மாற்றத்தைச் செய்துள்ளார்கள். இந்த இரட்டை வழக்கின் இன்னொரு பிரச்சனை என்ன தெரியுமா? தமிழர்கள் பலர் மேடை ஏறி பேசக் கூச்சப்படுகின்றனர். இதற்குக் காரணம் - அவர்களுக்குப் பேசத் தெரியும் ஆனால் இலக்கியத்தமிழில் பேசத் தெரியாது. பேச்சுத்தமிழில் பேசினால் கொச்சை என்கிறார்கள். இலக்கியத்தமிழில் பேசினால் தமிழ்க்காவலன் என்கிறார்கள். இதனால் நான் இலக்கியத்தமிழை எதிர்க்கிறேன் என எனக்கு முத்திரைக் குத்திவிடாதீர்கள். தமிழில் உண்மையான சிக்கல்கள் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டினேன்."//